இலங்கை கேப்டனிடம் ‘டிராவிட்’ அப்படி என்ன பேசினார்..? வெளியான சீக்ரெட்..!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டியின்போது இலங்கை கேப்டனுடன் ராகுல் டிராவிட் பேசியது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இதனை அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

இதனிடையே இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியின் போது இலங்கை கேப்டனை அழைத்து ராகுல் டிராவிட் பேசினார். அப்போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது திடீரென மழை குறுக்கிட்டதால், போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது.

அப்போது இலங்கை அணியின் கேப்டன் தாசுன் ஷானகாவை அழைத்த இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், மைதானத்தில் நீண்ட நேரமாக அவருடன் பேசினார். எதிரணியைச் சேர்ந்த கேப்டனாக இருந்தாலும், அவரை அழைத்து ராகுல் டிராவிட் அறிவுரை வழங்கியது இலங்கை ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த சூழலில் இலங்கை கேப்டனுடன் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் என்ன பேசினார்? என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதில், ‘அணியை நீங்கள் நன்றாக வழி நடத்தி வருகிறீர்கள். அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடுகின்றனர்’ என ராகுல் டிராவிட் கூறியதாக The Morning.Lk ஊடகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இரண்டாவது ஒருநாள் போட்டியில், இலங்கை வீரர்கள் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாகவும் டிராவிட் கூறியுள்ளார். அப்போட்டியில் வெற்றி பெறும் நிலையில் இலங்கை அணி இருந்தது. அப்போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹாரின் அதிரடி ஆட்டத்தால் 3 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றியை நழுவ விட்டது குறிப்பிடத்தக்கது.

Leave Your Comment